வெள்ளத்தில் மூழ்கிய ஜூரு!

தொடரும் துயரம்: இந்தியர்களுக்கு பல லட்சம் இழப்பு

ஜூரு –

ஜூரு வட்டாரத்தில் உள்ள தாமான் மாங்கா மற்றும் தாமான் பினாங்கு கடுமையான வெள்ளத்தில் மூழ்கியதால் இங்கு ஏறக்குறைய 70 சதவீதம் குடியிருக்கும் இந்தியர்களுக்கு பல லட்சம் வெள்ளி இழப்பு ஏற்பட்டுள்ளது என்று மதிப்பிடப்படுகிறது.

ஜூரு வட்டாரத்தில் அதிகம் குடியிருப்பு பூங்காக்கள் (தாமான்) உள்ள பகுதியில் இந்த வெள்ளப் பிரச்சினை தொடரும் துயரமாக இருக்கிறது என்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு தற்காலிகமாக சீனப் பள்ளி மண்டபத்தில் குடியேறி இருக்கும் பொது மக்கள் கூறினர்.

கடந்த இரண்டு நாட்களாக பினாங்கு முழுவதும் பெய்து வரும் அடை மழையால் பல்வேறு இடங்களில் வெள்ளம் ஏற்பட்டு வீட்டில் உள்ள பொருட்களை நாசமாக்கிவிட்டது.

ஜூரு தாமான் மாங்காவில் குடியிருக்கும் பினாங்கு மாநில தமிழ்ப்பள்ளியின் முன்னாள் அமைப்பாளர் இரா. காளிதாஸ் வீட்டில் நுழைந்த வெள்ளம், வீட்டில் உள்ள 10 ஆயிரம் வெள்ளிக்கும் மேற்பட்ட பொருட்களை சேதப்படுத்தியது. பினாங்கு தாமான் மாங்காவை பொறுத்தவரையில் வெள்ளப் பிரச்சினை ஒரு தொடர்கதையாக உள்ளதாக காளிதாஸ் கூறினார்.

கடந்த 2017ஆம் ஆண்டு பிற்பகுதியில் பினாங்கு முழுவதும் பெய்த புயல், மழையால் தாமான் மாங்கா குடியிருப்புப் பகுதி வீட்டின் கூரை வரை வெள்ளம் ஏற்பட்டதை அவர் நினைகூர்ந்தார்.

இந்த வட்டாரத்தில் அன்று பல லட்சம் வெள்ளி இழப்பை ஏற்படுத்தியது. அந்த காலகட்டத்தில் தன்னுடைய வீட்டில் மட்டும் 1 லட்சம் வெள்ளிக்கு மேல் இழப்பு ஏற்பட்டதை முன்னாள் தலைமை ஆசிரியரும் தமிழ்ப்பள்ளி அமைப்பாளருமான காளிதாஸ் நினைவுக் கூர்ந்தார்.

அதே நிலையில்தான் இன்று மழை ஒரு புறம் பெய்துகொண்டு இருந்தாலும் புதிதாக கட்டப்பட்ட நீர் அணை கால்வாய் பக்கத்தில் உள்ள பழைய கால்வாய் அணை உடைந்த காரணத்தால் ஜூரு வட்டாரத்தில் பெரும் வெள்ளம் ஏற்பட்டது. குறிப்பாக தாமான் மாங்கா, தாமான் பினாங் குடியிருப்புப் பகுதியில் மட்டும் இடுப்பளவு வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட வெள்ளத்தால் மிக மோசமான நிலையில் பாதிக்கப்பட்ட இந்தியர்கள், தங்களின் வீடுகளை வாடகைக்கு விட்டு விட்டும், சிலர் அப்படியே வீட்டை பூட்டி வைத்து விட்டும் வேறு ஒரு பகுதிக்கு வாடகைக்கு குடி புகுந்து விட்டார்கள் என்று தாமான் மாங்கா மக்கள் கூறினர்.

2017ஆம் ஆண்டு பிற்பகுதிக்குப் பிறகு இன்று மீண்டும் பெரும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது என்பது தொடர்கதையாகி விட்டது என்று மக்கள் கலக்கத்துடன் தெரிவித்தனர். நீர் வடிகால் மற்றும் தாமான் பகுதியில் உள்ள வாய்க்கால்களை அதிகாரிகள் பார்வையிட்டு விட்டு சென்றால் மட்டும் போதாது அதனை அவ்வப்போது பழுது பார்த்து வைத்துக்கொள்வதே சிறப்பு என்று பாதிக்கப்பட்ட மக்கள் கூறினர்.

பினாங்கு மாநிலத்தில் மத்திய மற்றும் தென் செபெராங் பிறை குடியிருப்புப் பகுதியில் உள்ள குடியிருப்புப் பகுதியில் ஏற்படும் வெள்ளப் பெருக்குக்கு நிரந்தரமான தீர்வு தேவை, இதனை அரசாங்கம் உண்மையாகவும் நேர்மையாகவும் கவனிக்க வேண்டும் என்று நள்ளிரவில் நிகழ்ந்த வெள்ளப் பெருக்கை பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக்கரம் நீட்ட வருகை அளித்த பத்து கவான் நாடாளுமன்ற உறுப்பினர் கஸ்தூரி ராணி பட்டுவிடம், இரு தாமான்களையும் சேர்ந்த குடியிருப்பாளர்கள் தங்களின் கோரிக்கையை முன் வைத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here