நாளை ஆக.3 ஆம் தேதி ஆடிப்பெருக்கு: தொட்டதை துலங்கவைக்கும் விழா… வழிபாடு செய்யும் முறைகள்

நீரைத் தெய்வமாக வழிபடும் மரபு நம்முடையது. இந்தப் பிரபஞ்சத்தின் ஆதாரசக்தியாக நீர் விளங்குகிறது. நீரால் உணவு உண்டாகிறது. உணவே உயிரை வளர்க்கிறது.

அத்தகைய நீரைக் கொண்டாடும் ஒரு நன்னாள் ‘ஆடிப் பெருக்கு’. இந்த நாளில் காவிரிக் கரைத் தலங்களிலெல்லாம் மக்கள் கூடி அன்னை காவிரியை வழிபடுவர். மேலும் ‘இந்த நாளில் அனைத்து நீர் நிலைகளிலும் அன்னை காவிரி எழுந்தருளியிருப்பாள்’ என்பது ஐதிகம்.

ஆடி மாதம் தமிழர்களின் வாழ்வியலில் மிகச்சிறந்த மாதமாகும். ‘இந்த மாதத்தில்தான் பூமி தேவி அவதாரம் செய்தாள்’ என்கின்றன புராணங்கள். ‘வாழ்வாதாரமாகத் திகழும் உணவுப் பொருள்களை விளைவிக்கத் தொடங்கும் நாளே ஆடிப் பெருக்கு’ என்கின்றன சாஸ்திரங்கள்.

செடி, கொடிகளின் ஆதாரமாக விளங்குபவர் சந்திரபகவான். செடி கொடிகளைப் பராமரிக்க சூரிய சக்தி தேவை. எனவேதான், ஆடிப்பெருக்கு அன்று நவதானியங்களை மண்ணில் பரப்பி நீரும், நிலமும் சேர்கின்ற இடமாகிய ஆற்றுப் படுக்கையில் சேர்த்து இயற்கை அன்னையை வழிபடுகின்றனர். ஆடிப் பெருக்கென்று விதைத்தால்தான், தைமாதம் அறுவடை செய்யமுடியும். ‘தைப் பிறந்தால் வழிபிறக்கும்’ என்பார்கள்.

ஆடிப் பெருக்கு அன்று அதிகாலையில் துயில் எழுந்து கங்கை, யமுனை, கோதாவரி, சரஸ்வதி, நர்மதை, சிந்து, காவிரி உள்ளிட்ட ஏழு நதிகளையும் மனதில் நினைத்துக்கொண்டு நீராட வேண்டும். அதன் பிறகு, பூஜை அறையில் விளக்கு ஏற்றி கணபதியை வழிபடவேண்டும்.

கணபதியை தினமும் வழிபடுவதன் மூலம் ஆரோக்கியம் மற்றும் அமைதியைப் பெற முடியும். ஆயில்ய நட்சத்திரத்தின் அதிபதி சர்ப்ப தெய்வங்கள். சர்ப்ப தெய்வங்களின் தலைவர் ‘அனந்தன்’ எனப்படும் ‘ஆதிசேஷன்’. எனவே, கணபதியைப் பிரார்த்தித்த பிறகு ஆதிசேஷன் எனப்படும் நாக தெய்வத்தைப் பிரார்த்திக்க வேண்டும். அதன் மூலம் தோஷங்கள் அனைத்தும் விலகிவிடும்; நம் உணவுப் பொருள்கள் அனைத்தும் நஞ்சற்றதாகி, அமிர்தமாகும் என்பது ஐதிகம்.

ஆடி பதினெட்டு அன்று புத்தாடை உடுத்தி பெரியோர்களின் ஆசியைப் பெறவேண்டும். பெரியோர்களின் வாழ்த்து, வெற்றியையும் அமைதியையும் கொடுக்கும். பிறகு, வீட்டின் பூஜை அறையில் ஒரு சொம்பில் தூய நீர் நிரப்பி வைக்கவேண்டும். சொம்பு முழுவதும் நிறைந்திருக்கும் தண்ணீர் மகாலட்சுமியை வீட்டுக்கு அழைக்கும் மகத்துவம் வாய்ந்தது.

அதன் பிறகு ஆற்றுப்படுகை, நீரோடை அல்லது நீர் நிலை ஏதேனும் ஒன்றுக்குச் சென்று காவிரித் தாயை வழிபடவேண்டும். தலைவாழை இலையில் வெற்றிலை – பாக்கு, மஞ்சள் குங்குமம், வாழைப்பழம், தேங்காய், பலகாரங்கள் ஆகியவற்றைப் படைத்து அகல்விளக்கு ஏற்றி வைத்து, பார்வதி தேவியின் அம்சமான பச்சை அம்மனை மனதில் நினைத்துக்கொண்டு, எண்ணிய காரியங்கள் அனைத்தும் நிறைவேற வேண்டும் என்றும் வணங்கவேண்டும்.

முடிந்தவர்கள், தேங்காய் சாதம், எலுமிச்சை சாதம், தயிர்ச் சாதம், கற்கண்டு சாதம், சர்க்கரைப் பொங்கல் உள்ளிட்ட ஐந்து வகையான உணவுகளைத் தயார் செய்து அம்மனுக்கு நைவேத்யம் செய்ய வேண்டும். இந்த வழிபாட்டின் மூலம் தேவியின் அருளை பெறலாம்.

புது தம்பதியர் தம் வாழ்க்கை சுபமாக அமைய வேண்டும் என்று திவ்ய மங்கலங்களாகிய பாக்கு – வெற்றிலை, மஞ்சள் – குங்குமம், தாலிக்கயிறு, வளையல் ஆகியவற்றை சுமங்கலிப் பெண்களுக்குத் தானமாக வழங்கி நீரும் நிலமும் இணையும் நீர் நிலைகளில் பூஜை செய்யவேண்டும்.

இப்படிச் செய்வதன் மூலம் காலம் முழுவதும் பூவோடும், பொட்டோடும், சுமங்கலியாக வாழும் பேறு கிடைக்கும். அதன்பிறகு தாலிக் கயிற்றை மாற்றிக்கொள்ளலாம்.

ஒரு பெண்ணுக்கு வாழ்வில் ஐந்துவிதமான தாலியைச் சூடும் பாக்கியங்கள் வாய்க்கலாம். திருமணம், சஷ்டியப்த பூர்த்தி, பீமரதசாந்தி, சதாபிஷேகம், கனகாபிஷேகம் உள்ளிட்ட ஐந்து முறை மாங்கல்யத்தை அணிந்துகொள்வது பூரண வாழ்வின் அடையாளம்.

‘இந்த ஐந்துவித மாங்கல்யங்களும் தனக்குக் கிடைக்க வேண்டும்’ எனும் வேண்டுதலின் அடிப்படையிலேயே ஆடிப் பெருக்கு அன்று தாலி கயிறு மாற்றும் வழக்கம் உண்டானது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here