உலகிலேயே அதிவேக இணையம் தன்வசம்; சீனா பெருமிதம்

பெய்ஜிங்:

வினாடிக்கு 1.2 TB வேகம் கொண்ட இணையச் சேவை தன்னிடம் உள்ளதாகச் சீனா கூறியுள்ளது. பல நாடுகளில் இயங்கும் இணையச் சேவையை விட இது பன்மடங்கு வேகமானது.

பெய்ஜிங் நகரை அந்நாட்டுத் தெற்குப் பகுதியுடன் இணைக்கும் 3,000 கி.மீ. நீள இணையக் கட்டமைப்பை, ஹுவாவே டெக்னாலஜீஸ் கம்பெனி, சீனா மொபைல் லிமிடெட் ஆகிய இரு நிறுவனங்களும் அமைத்துள்ளன.

இது அதன் தொழில்நுட்பத்தின் அதிநவீன சாதனை என்று சீனா பெருமிதம் அடைந்துள்ளது.

ஸிங்ஹுவா பல்கலைக்கழகத்துடனும் ஸெர்நெட்காம் கார்ப் ஆய்வு நிறுவனத்துடனும் ஹுவாவே, சீனா மொபைல்ஸ் ஆகியன கூட்டாக செயல்பட்டு இதனைத் தயாரித்துள்ளன. உலகில் எங்குமில்லாதது எனக் கருதப்படும் இச்சேவை, நிலைத்தன்மை, நம்பகத்தன்மை போன்றவற்றை உறுதிசெய்துள்ளதாகச் சீனா கூறுகிறது.

சீனாவின் இந்தத் தயாரிப்பின் உண்மைத் தன்மையை இன்னும் உறுதிசெய்யவில்லை என்று புளும்பர்க் செய்தி நிறுவனம் கூறியது.

ஹுவாவேயின் போட்டி நிறுவனமான நோக்கியா, கடந்த பிப்ரவரி மாதத்தில் இதேபோன்று 118 கி.மீ. நீள இணையச் சேவைக் கட்டமைப்பை ஐரோப்பாவில் உருவாக்கி இருப்பதாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here