மங்களமான மருதாணி

மருதாணி மங்களத்தின் அடையாளம் என்பதுடன், செல்வத்திற்கான அடையாளம் ஆகும். மருதாணியை செடியில் இருந்து பறிப்பது முதல் கையில் வைப்பது வரை பல வழிமுறைகள் இருப்பதாக சாஸ்திரம் சொல்கிறது. இவற்றை முறையாக பயன்படுத்தினால் கண்டிப்பாக மருதாணி வைப்பதன் ஆன்மிக, ஜோதிட மற்றும் மருத்துவ பலன்களையும் நம்மால் பெற முடியும்.

திருமணம், வீட்டில் நடக்கும் சுப நிகழ்ச்சிகளின் போது பெண்கள் கையில் மருதாணி வைப்பது வழக்கம். அழகிற்காக, உடல் சூட்டை தணிப்பதற்காக, உடலில் உள்ள பித்தத்தை குறைப்பதற்காக என மருதாணி வைப்பதற்கு மருத்துவ ரீதியாக பல காரணங்கள் சொல்லப்படுகிறது. அதே சமயம் ஆன்மிக ரீதியாகவும் சில முக்கியமான காரணங்கள் சொல்லப்படுகிறது. லட்சுமி தேவிக்கு விருப்பமான, மகாலட்சுமி வாசம் செய்யும் பொருட்களில் ஒன்றாகவும் மருதாணி சொல்லப்படுகிறது. அதனால் மருதாணி வைத்துக் கொள்வதால் ஐஸ்வர்யம் பெருகும் என சொல்லப்படுகிறது. மருதாணி வைப்பதற்கும், ஐஸ்வர்யம் பெருகுவதற்கும் என்ன தொடர்பு? மருதாணி வைப்பதற்கு ஏதாவது வரைமுறை உள்ளதா? எந்த நாளில், எந்த முறையில் மருதாணி வைத்தால் செல்வம் பெருகிக் கொண்டே போகும்? என்பதை தெரிந்து கொண்டு வைத்தால், அதன் முழு பலனை நம்மால் அடைய முடியும்.

மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் இரண்டு கலைகள் உள்ளன. ஒன்று சூரிய கலை, மற்றொன்று சந்திரக் கலை. சூரிய கலை என்பது மனிதனின் செயலுக்கும், சந்திர கலை என்பது மனிதனின் சிந்தனைக்கும் காரணமானவை. செயல், சிந்தனை இவை இரண்டும் சரியாக இருந்தால் அளவில்லாத வெற்றிகள் கிடைத்துக் கொண்டே இருக்கும். இது ஆண், பெண் இரு பாலினருக்கும் உண்டு. ஆண்களுக்கு வலது கையில் சூரிய கலையும், இடது கையில் சந்திர கலையும் உள்ளது. அதே போல் பெண்களுக்கு வலது கையில் சந்திர கலையும், இடது கையில் சூரிய கலையும் உள்ளது. வெற்றிகள், செல்வம், மகிழ்ச்சி ஆகியவை நிறைந்திருக்கவும், கண் திருஷ்டி போன்றவை மறையவும் மருதாணி வைப்பது உதவுகிறது.

ஜோதிட சாஸ்திரங்களில் ஒன்றான கைரேகை ஜோதிடத்தில், கைகளின் ரேகையை வைத்தே ஒருவரின் கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலத்தை பற்றி சொல்ல முடியும் என்பது அனைவருக்கும் தெரியும். அப்படிப்பட்ட ரேகைகள் ஒன்று கூடும் உள்ளங்கையில் மருதாணி வைப்பதால் ரேகைகள் பளிச்சிடும். முந்தைய காலத்தில் மருதாணி வைக்கும் போது, உள்ளங்கையில் பெரிய வட்டமும், அதைச் சுற்றி சிறிய புள்ளிகள் போன்றும் வட்ட வடிவில் வைப்பார்கள். நம்முடைய முன்னோர்களும், அவர்கள் கற்றுக் கொடுத்த பழக்க வழக்கங்களுக்கும் எத்தனை அர்த்தங்கள் உள்ளது என்பதற்கு மற்றொரு உதாரணம் தான் இந்த மருதாணி வைக்கும் முறை. நடுவில் வைக்கும் பெரிய வட்டம் சூரியனையும், அதை சுற்றி வைப்படும் சிறிய புள்ளிகளுடன் கூடிய வட்டம் கோள்களையும் குறிக்கக் கூடியவை. இந்த முறையில் மருதாணி வைப்படும் போதும் சூரியனும், நவகிரகங்களின் நிலையும் பலப்படும். கோள்களால் ஏற்படும் பாதிப்புகள் குறையும்.

வில்வம், துளசி ஆகியவற்றை பறிப்பதற்கு, பயன்படுத்துவதற்கு எப்படி முறை உள்ளதோ அதே போல் மருதாணியை பறிப்பதற்கும், பயன்படுத்துவதற்கும் முறைகள் உள்ளன. மருதாணியை மாலை விளக்கேற்றிய பிறகு பறிக்கக் கூடாது. கிழமைகளில் வியாழன், வெள்ளி, ஞாயிறு ஆகியவை மருதாணி வைப்பதற்கு மிகவும் ஏற்ற நாட்களாகும். அதிலும் ஞாயிற்றுகிழமையில் மருதாணி வைப்பது மிகவம் சிறப்பானது. திதிகளில்
பஞ்சமி, தசமி, ஏகாதசி, துவாதசி ஆகிய திதிகள் மருதாணி வைக்க ஏற்ற திதிகளாகும். அதே போல் நட்சத்திரங்களில் பரணி, பூரம், பூராடம் ஆகியவை மருதாணி வைப்பதற்கு ஏற்ற நட்சத்திரங்கள் ஆகும்.

முகூர்த்தம் வைப்பதற்கு, நல்ல காரியங்கள் செய்வதற்கு, ஏதாவது பொருட்கள் வாங்குவதற்கு எப்படி நல்ல நேரம் பார்த்து செய்கிறோமோ அதே போல் மருதாணி வைப்பதும் நல்ல நேரத்தில் தான் வைக்க வேண்டும். ராகு காலம், எமகண்டம் ஆகிய நேரங்களில் மருதாணி வைக்கக் கூடாது. சந்திராஷ்ட காலங்களில் மருதாணி வைப்பதை தவிர்க்க வேண்டும். அவரவருக்கு சந்திராஷ்டமம் நடக்கும் போது மட்டுமின்றி, பரணி, பூரம், பூராடம் நட்சத்திரங்களின் சந்திராஷ்டமம் நடக்கும் காலங்களிலும் மருதாணி வைக்கக் கூடாது.

மருதாணி நம்முடைய கைகளுடனேயே இருக்கக் கூடியது. நாமும் சரி, மற்றவர்களும் சரி அடிக்கடி பார்க்கக் கூடியது என்பதால் மருதாணி வைப்பதற்கும் கூட திசைகள் பார்ப்பது மிகவும் முக்கியம். மருதாணி வைப்பதன் முழு பலனையும் நாம் பெற வேண்டும் என்றால் கிழக்கு, வடக்கு ஆகிய திசைகளில் அமர்ந்து மருதாணி வைப்பது சிறந்தது. மருதாணி வைப்பவர்கள் வடக்கு திசை பார்த்தும், மருதாணி வைத்துக் கொள்பவர்கள் கிழக்கு திசைநோக்கியும் அமர்ந்து மருதாணி வைக்க வேண்டும். லட்சணங்கள் என சாஸ்திரங்கள் குறிப்பிடும் விஷயங்களில் ஒன்று மருதாணி வைத்துக் கொள்வது. மருதாணி வைப்பதால் கைகளுக்கு ஒரு விதமான அழகு வந்து விடுகிறது. நேர்மறை ஆற்றல்கள் அதிகரிக்கின்றன.

மருதாணி வைப்பதில் வலது கையில் வைக்கும் மருதாணிக்கும், இடது கையில் வைக்கும் மருதாணிக்கும் வேறுபாடு உள்ளது. ஆண்களுக்கு சூரிய கலையும், பெண்களுக்கு சந்திர கலையும் வந்து விட்டால் அவர்கள் வாழ்வில் மிகப் பெரிய வெற்றியை அடைவார்கள் என சாஸ்திரங்கள் சொல்கின்றன. கையில் மருதாணி வைக்கும் போது கைராசி ஏற்படுகிறது. அந்த கைகளால் தான, தர்மம் செய்யும் போதும், விளக்கேற்றி பூஜை செய்யும் போதும் அதன் பலன் பல மடங்காக அதிகரிக்கும். இப்படி புண்ணியம், வெற்றி என அனைத்தும் சேரும் போது அங்கு செல்வ செழிப்பும் தானாக வந்து கொண்டே இருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here