கேகேபி இடைத்தேர்தல் விடை தருமா?

பி. ஆர். ராஜன்

வரும் மே 11ஆம் தேதி கோல குபு பாரு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு ஏப்ரல் 27ஆம் தேதி சனிக்கிழமை சமர்ப்பிக்கப்படும். இத்தொகுதியில் கிட்டத்தட்ட  18 விழுக்காட்டினர் இந்திய வாக்காளர்கள் ஆவர்.

இந்த இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து அனைத்துத் தரப்பினரின் பார்வையும் அரசியல் அலசலும் இந்தியர் பக்கமே உள்ளது. இந்தியர்கள் யார் பக்கமோ அவர்கள்தான் வெற்றி பெறுவர் என்பது அனைத்துத் தரப்பினராலும் ஒப்புக்கொள்ளப்பட்டிருக்கிறது.

மடானி அரசாங்கத்தில் இடம்பெற்றுள்ள  பக்கத்தான் ஹராப்பான் கூட்டணியின் உறுப்பு கட்சியான ஜசெக வேட்பாளர் களமிறக்கப்படுகிறார். அதேபோன்று எதிரணியில் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியில் இடம் பெற்றுள்ள கெராக்கான் கட்சி அதன் வேட்பாளரை களமிறக்குகிறது.

இந்நிலையில்  இந்திய வாக்காளர்களின் ஆதரவை தவிர்க்க முடியாத பட்சத்தில்  மடானி அரசாங்கத்தில் இடம் பெற்றுள்ள அனைத்துத் தரப்பினரும் வெற்றிக்காகப் பாடுபட வேண்டும் என்று பிரதமரும் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணித் தலைவருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கேட்டுக்கொண்டிருக்கிறார்.

பாரிசான் நேஷனல் வேட்பாளர் நிறுத்தப்பட்டால் மட்டுமே  பிரச்சாரம் செய்வோம், ஆதரவு திரட்டுவோம் என்று மஇகா, மசீச ஆகிய கூட்டணி கட்சிகள் ஏற்கெனவே அறிவித்திருந்தன.

ஆனால், இந்த இடைத்தேர்தலில் முழு வீச்சில்  பிரச்சாரம் செய்து உதவிட வேண்டும் என்று அன்வார் மஇகாவை நாடியிருக்கிறார்.  கடந்த பொதுத்தேர்தலின்போது இந்திய சமுதாயத்திற்கு அளித்த வாக்குறுதிகளை டத்தோஸ்ரீ அன்வார் இன்றளவும்  முழுமையாக நிறைவேற்றவில்லை. ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்து 2 ஆண்டுகளாகிவிட்டது.

இருப்பினும்,  வாக்குறுதிகள் வெறும் வாக்குறுதிகளாக மட்டுமே இருக்கின்றன.  இந்த வாக்குறுதிகள் பற்றி  கேள்விகள் எழுப்பும்போதெல்லாம் பல காரணங்களைச் சொல்லி அவர் சமாளித்து வருகிறார்.

இந்திய சமுதாய வாக்காளர்கள் இந்த இடைத்தேர்தலை தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொள்ளப் போகிறார்களா? அல்லது மீண்டும் ஒரு முறை ஏமாறுவதற்குத் தயாராகிக் கொண்டிருக்கிறார்களா?

மடானி அரசாங்கம் பொறுப்பேற்றபோது தமிழ் பேசக்கூடிய ஒரு முழு அமைச்சர் (வ. சிவகுமார்), இரண்டு துணை அமைச்சர்கள் நியமனம் செய்யப்பட்டனர்.

அரசாங்கம் பதவி ஏற்று ஓர் ஆண்டு நிறைவின்போது மனிதவள அமைச்சராக இருந்த சிவகுமார் பதவியிலிருந்து திடீரென நீக்கப்பட்டார்.  அவருக்குப் பதிலாக  ஸ்டீவன் சிம் மனிதவள அமைச்சராக நியமனம் பெற்றார். இந்த இருவருமே ஜசெக கட்சியைச் சேர்ந்தவர்கள். இது உள்கட்சி அரசியல் என்று சொல்லப்படுகிறது.

இதன்பின்னர் துணை அமைச்சர் ராம் கர்ப்பால் சிங் அப்பதவியிலிருந்து விலக, சுங்கை பூலோ தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ரமணன் ராமகிருஷ்ணன் தொழில் முனைவோர் மேம்பாடு, கூட்டுறவுத் துறை துணை அமைச்சராகப் பதவி ஏற்றார்.

இந்திய சமுதாயத்திற்கு தமிழ்ப் பேசக்கூடிய ஒரு முழு அமைச்சர் தேவை என்று முன்வைக்கப்பட்ட தொடர் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்கப்படவில்லை. இது சதையில் தைத்த முள்ளாகவே ஒரு வலியைத் தந்துகொண்டிருக்கிறது.

கோல குபு பாரு இடைத்தேர்தல் இந்த வலிக்கு மருந்தாக இருக்க வேண்டும் என்று இந்திய சமுதாயம் குறிப்பாக அத்தொகுதி இந்திய வாக்காளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

டத்தோஸ்ரீ அன்வார் அவருடைய வாக்குறுதியில் உண்மையாக இருக்கிறாரா என்ற கேள்விக்கு விடைதரக்கூடியதாக இந்த இடைத் தேர்தல் விளங்கும் என்று சமுதாயம் நம்புகிறது.

முழு அமைச்சர் பதவிக்கு அதுவும்  தமிழில் சரளமாகப் பேசக்கூடிய  தகுதிமிக்கவர்கள் ஒற்றுமை அரசாங்கத்தில் பலர் உள்ளனர்.  மலேசிய இந்தியர்களின் குரலாக  அமைச்சரவையில் ஒலிப்பதற்கு தகுதி பெற்ற ஓர் இந்திய அமைச்சர் தங்களுக்கு வேண்டும் என்று இந்திய சமுதாயம் கேட்பது அதிகபட்சமான ஒன்று அல்ல. நியாயமான மேலும் உரிமையுள்ள ஒரு கோரிக்கை என்பதை பிரதமர் புரிந்துகொள்ள வேண்டும்.

கோல குபு பாரு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலை மடானி அரசாங்கம் சாதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது.  பக்காத்தான் ஹராப்பான் – பெரிக்காத்தான் நேஷனல் இடையிலான பலத்தை, செல்வாக்கை சோதிக்கக்கூடிய ஓர் அளவுகோலாக  இது இருக்கின்றது.

இத்தொகுதியைத் தக்க வைத்துக் கொள்வதன் மூலம் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணிக்கு உள்ள தெளிவான அரசியல் செல்வாக்கை பிரதிபலிப்பதாக இருக்கும் என்பது நிதர்சனம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here