“பெருமானே, தாங்கள் முதலமைச்சராக இருந்து இந்த நாட்டிற்கும் நகரத்திற்கும் உதவி செய்ய வேண்டும்” என்று வேண்டினான். பதவியை விரும்பாத மாணிக்கவாசகர் மூன்று வேளையும் அங்கயற்கண்ணி அம்மையாரையும் ஆலவாயண்ணலையும் சேவிக்க இது பயனாக இருக்கும். பதவியில் இருந்தால் மக்களுக்கு உதவி செய்யலாம் என்று எண்ணி அந்தப் பதவியை ஏற்றுக் கொண்டார்.
முதலமைச்சராகப் பதவி ஏற்று ஒவ்வொரு நாளும் மக்களுக்கு என்ன தேவை என்று தெரிந்து நன்மை செய்தார். அரசன் அரிமர்த்தன பாண்டியனுக்குக் கவசமாகவும் விளங்கினான். அப்போது அரிமத்தன பாண்டியனுடைய படையிலே குதிரைப் படைகள் நோய்வாய்ப்பட்டும் கிழத்தனமாகியும் இறந்து விட்டன.
அரசன் மாணிக்கவாசகரை அழைத்து, “முதலமைச்சரே, கருவூலத்தைத் திறந்து செம்பொன்களை எடுத்துக் கொண்டு போய் துறைமுகத்திலே நல்ல குதிரைகள் வரும். வாங்கி வாரும்” என்றான். அவ்வாறே மாணிக்கவாசகர் கருவூலத்தைத் திறந்து பொற்குவியல்களை எடுத்துப் பொதி மாட்டின் மேலேயும் ஒட்டகத்தின் மேலேயும் வைத்துக் கொண்டு புறப்பட்டார்.
நேரே ஆலயத்துக்குச் சென்று சொக்கலிங்கப் பெருமானை வணங்கி, மீனாட்சியம்மையாரைத் தொழுதார். அர்ச்சகர் திருநீறு கொண்டு வந்து கொடுத்தார். இது நல்ல சூசகம் என்று எண்ணி இரண்டு கரங்களாலும் வாங்கித் திருநீற்றை இட்டுக் கொண்டார். பிறகு பல்லக்கிலே சென்றார் குதிரைகள் வாங்க. அவருடைய சிந்தையெல்லாம் சிவனிடத்திலே இருந்தது. அவரை ஆட்கொள்ளும் பொருட்டு சிவபெருமான் கைலாசத்தில் இருந்து திருப்பெருந்துறைக்கு குருவடிவாக வந்தார்.
குருந்த மரத்தின் கீழே எழுந்தருளினார். அங்கே சிவகணங்கள் எல்லாம் தவமுனிவர்களாக இருந்தார்கள். சிவபெருமானைப் பார்த்த உடனே மாணிக்கவாசகர் தழலிடைப்பட்ட மெழுகு போலே உள்ளம் உருகினார். “ஐயனே” ன்று திருவடியிலே விழுந்தார். ஓம் சிவாய நம, ஓம் சிவாய நம, ஓம் சிவாய நம என்கிற சூக்கும பஞ்சாட்சரத்தை உபதேசித்தார்.
சி சிவம்
வ அருள்
ய ஆன்மா
ந திரோதமலம்
ம ஆணவ மலம்
இதுதான் ஐந்தெழுத்தினுடைய பொருள். இந்த உபதேசம் பெற்ற உடனேயே அது நிறைந்து வெளிப்பட்டு வாய் வழியாக “நமச்சிவாய வாழ்க நாதன்தாள் வாழ்க” என்று சிவபுராணம் பிறந்தது.
இப்படி ஐந்தெழுத்தை முதலாகக் கொண்டு தொடங்கிய நூல் திருவாசகம் ஒன்றுதான். அகில உலகத்தையும் வாழ வைக்கின்ற பஞ்சாட்சரத்தை முதலாகக் கொண்ட அந்தத் திருவாசகமாகிய தேன் அவரது வாய் வழியாக வந்து ஊற்றெடுத்தது. இந்த உலகத்தையே மறந்து விட்டார். குதிரைகள் வாங்கக் கொண்டு போன பணத்தையெல்லாம் திருக்கோவில் திருப்பணிக்குச் செலவிட்டார். வேத பாடசாலை, திருக்குளங்கள், பசுமடம் முதலியன அமைத்தார்.
பாண்டியன் பதறாது, ஒரு சிறந்த சேவகனை அனுப்பி ‘குதிரைகள் வாங்கியாயிற்றா’ என்று கேட்டு வரச் செய்தான். சேவகன், திருப்பெருந்துறை வந்து மாணிக்கவாசகரைப் பணிந்து, “முதலமைச்சரே, குதிரைகள் வாங்கியாயிற்றா என்று மன்னர் விசாரித்து வரச்சொன்னார்” என்றான். “ஆண்டவனே நான் என்ன சொல்வது?” என்று எம்பெருமானை மாணிக்கவாசகர் கேட்டார்.
“ஆவணி மூலத்தன்று குதிரைகள் வருமென்று நீயே போய் சொல்” என்று இறைவன் கூறி அருளினான். அப்படியே மாணிக்கவாசகர் வந்து ஆவணி மூலத்தன்று குதிரைகள் வருமென்று சொன்னார். அரசன் மகிழ்ந்து அவருக்குப் பொன்னாடை போர்த்தினான். சுற்றத்தார்கள் வந்து மாணிக்கவாசகரிடம், ‘குதிரை வாங்காமலே வாங்கி விட்டதாகக் கூறி விட்டீர்களே, மன்னவன் தங்களை துன்பப்படுத்துவானே’ என்றனர். அப்போது சுவாமிகள் சென்னார். அதைப்பற்றி உங்களுக்கு என்ன கவலை? என்ன வந்தாலும் சிவனுடைய அருள்தானே காரணம். வினையின் வண்ணமாக எது வந்தாலும் தாங்கிக் கொள்வேன் என்றார்.
குறித்த நாளில் குதிரை வரவில்லை. பாண்டியன் கோபம் கொண்டான். மாணிக்கவாசகரை தண்டிக்க அனுமதி கொடுத் தான். சுவாமிகளை அரசனுடைய சேவகர்கள் துன்புறுத்தினர். ஆனால் மாணிக்கவாசகரோ ஆண்டவனே நன்றே செய்வாய். பிழை செய்வாய். நானோ இதற்கு நாயகமே என்று இறைவனை நினைந்து கண்ணீரினால் உடம்பு நனைந்து பரவசமாக நிற்கின்றார்.
சிவபெருமான் காட்டில் உள்ள நரிகளையெல்லாம் குதிரை களாகச் செய்தார். மதுரை வீதியிலே அணி அணியாக குதிரைப்படைகள் வந்தன. தூதர்கள் சென்று பாண்டியனிடம் சொன்னார்கள். குதிரைப்படை ஏராளமாக வருகின்றதென்று. அரசன், மாணிக்கவாசகரைத் தொழுது, “ஐயனே, என்னை மன்னிக்க வேண்டும்” என்று பணிந்தான். குதிரை லாயங்களைச் செப்பனிட்டு அவைகளுக்குக் கொள்ளும் புல்லும் போட்டனர்.
நடு இரவில் பரிகளெல்லாம் நரிகளாகி மதுரை மாநகர் முழுவதும் ஊளையிட்டுச் சென்றன. கானகத்திற்குச் சென்று விட்டன. இதைப்பாண்டியன் அறிந்து முதல்அமைச்சர் நம்மை ஏமாற்றி விட்டார் என்று கருவினான். பிறகு மாணிக் வாசகர் திருமேனியிலே நெய் தடவி சுடுகின்ற வைகை மணலிலே உருட்டுமாறு செய்தான். துன்பத்தை அடைந்த சுவாமிகள் சிவபெருமானுடைய திருவடியை நினைத்து உருகினார். அப்போது சிவ பெருமான் வைகையிலே வெள்ளம் வருமாறு செய்தார்.
நகரத்தையே அடித்துக்கொண்டு போகுமாப்போலே வைகை வெள்ளம் பெருக்கெடுத்தது.
அந்த அம்மையாருடைய செவியிலே அரசனுடைய ஆணையலி கேட்டது. என் பங்குக்குரிய கரையை உயர்த்த வில்லையானால் பாண்டியன் என்னைத் தண்டிப்பானே என்று அஞ்சினாள். சொக்கலிங்கப் பெருமானை நோக்கி முறையிடுகின்றாள்.
“பரமேஸ்வரா, நான் என்ன செய்வேன்” என்று பெருமானை எண்ணித் தொழுது அழுதாள். ஆண்டவன் உடனே கூலியாளாகப் புறப்பட்டான். வந்தியம்மையின் வீட்டின் முன்னின்று கூலியோ கூலி, கூலி கொடுத்து எனை வேலை கொள்வார் உண்டோ என்று கூவி நின்றார். “அப்பா உள்ளே வா” அழைக்கின்றாள் வந்தி. “பாட்டி நான் உள்ளே தான் இருக்கின்றேன். உன் உள்ளத்தில் இருக்கின்றேனே” என்கின்றார் பெருமான்.
“அப்பா! நீ அழகாக இருக்கின்றாயே, ஏன் கூலி வேலைக்கு வந்தாய்?” “பாட்டி ! எனக்கு ஊருமில்லை, பேருமில்லை, என் மனைவி தர்ம சம்வர்த்தனி, ஊருக்கெல்லாம் அன்னம் படைக்கின்றாள். மூத்தபிள்ளைக்கு மகோதரம் , கடைசிப் பையன் கலப்பு மணம் செய்துகொண்டான்.வெறுத்தப் போய் நஞ்சை உண்டேன். ஆயினும் உயிர் போகவில்லை. ஆகவே, மண்ணெடுத்துப் பிழைக்கின்றேன்”.
“அப்பா இந்த ஊரிலே கோடீஸ்வரர்கள் இருக்கின்றார்கள். அவர்களிடம் போகாமல் இந்த ஏழை வீட்டுக்கு வந்தனையே! “பாட்டி, ஏழையும் பணக்காரனும் எனக்கு ஒன்று தான்” “அப்பா, நிச்சயமா என்னிடத்தில் காசு பணம் இல்லை. பிட்டு வியாபாரம் அந்தப்பிட்டுக்கு மண் சுமப்பாயா? “பெருமாட்டி! நீ பணம் கொடுத்தாலும் பிட்டோ தோசையோ வாங்கிச்சாப்பிடுவேன். பிட்டே கொடுத்தால் நான் கடைக்குப் போகின்ற வேலை மிச்சம். பிட்டுக்கே மண் சுமக்கின்றேன்” “உதிர்ந்து போன பிட்டு தான் தருவேன். உதிராத பிட்டை விற்று நாளை முதலுக்குப்பணம் வேணும்”
“பாட்டி, நீ உதிராத பிட்டு கொடுத்தால் நான் உதிர்ந்துத்தானே தின்ன வேணும், உதிர்ந்த பிட்டைக் கொடுத்தால் உதிர்க்கிற வேலை மிச்சம். எல்லாப் பிட்டும் உதிர்ந்து விடும் கவலைப்படாதே” வந்தி அவித்த பிட்டை எடுத்துப் பார்க்கின்றாள். அத்தனையும் உதிர்ந்திருந்தது. அந்த பிட்டுகளை சாப்பிட்ட சிவபெருமான் “பாட்டி நிரம்ப திருப்தி, இன்னும் பிட்டு ஏதாவது இருந்தால் சுட்டு வை” என்று கூறிவிட்டு வைகைக் கரையடைக்கும் இடத்திற்குச் சென்றார். அங்கே கண்காணிப்பாளரைப் பார்த்து, “என் பேர் சொக்கன். நான் வந்தியின் ஆள் என்று குறித்துக்கொள்ளுங்கள்” என்றார்.
கண்காணிப்பாளர் வந்தியின் பங்கு இது என்பதைக் காட்டினார். “இந்தக்குச்சியில் இருந்து அந்தக்குச்சி வரை வந்தியின் பங்கு” என்றார். ஆடுவார்,ஓடுவார் மணல் குவிப்பார் எல்லோரும் தங்கள் தங்கள் வேலையை விட்டு இவரைப் பார்க்க ஆரம்பித்தனர். மாலை நேரம் பாண்டியன் வைகையாற்றின் கரைக்கு குதிரை மேலே வருகின்றான். எல்லா கரையும் உயர்ந்திருக்கிறது. ஒரு கரை மட்டும் உயரவில்லை. “இது யார் கரை” என்று மன்னன் கேட்டான். அங்கிருந்தோர் “இது வந்தியம்மையார் கரை” என்றனர்.
“அவள் ஆள் யாரையும் வைக்கவில்லையா?” மன்னன் கேட்கின்றான். “அரசே, நல்ல ஆளாகத்தான் வைத்திருக்கின்றாள். ஆள் மொழு மொழு என்றிருக்கின்றான். வேலை செய்யாமல் பாட்டுக்கச்சேரி செய்கின்றான்”. என்று உடன் இருந்தோர் கூறினர். “கொண்டா அவனை” வேந்தனின் கோபத்தைக் கண்டு அஞ்சியோடி அழைத்து வந்தனர்.
சிவபெருமானுடைய முதுகிலே பிரம்பால் அடித்தான் பாண்டியன் அந்த அடி அவன் முதுகிலேயே பட்டது. பிரம்மாவினுடைய முதுகிலே பட்டது. திருமாலுடைய முதுகிலே பட்டது. இந்திரன் முதுகிலே பட்டது. சராசரங்கள் எல்லாம் அடிபட்டன. “பாண்டியனே, உன் பணமெல்லாம் அறவழியினாலே வந்தது. ஆகவே, அதனை அறப்பணியிலே சேர்த்திடு” என்று அசரிரீ எழுந்தது. பாண்டியன் வந்து மாணிக்க வாசகரைத் தொழுது, “தாங்கள் பழையபடி முதல்அமைச்சராக இருக்கவேண்டும்” என்று வேண்டினான். இந்த வம்பே வேண்டாமென்று மணிவாசகர் புறப்பட்டார். உத்தரகோச மங்கை சென்று பாடினார். பின் திருவண்ணா மலையில் திருவெம்பாவை பாடினார்.
மாணிக்கவாசகர் உடைய வாக்கிலே திருவெம்பாவை மிகமிக உயர்ந்தது. அவருக்குத் திருக்கழுக்குன்றத்திலே பாத தரிசனம் கிடைத்தது. பிறகு, தில்லை சிதம்பரம் வந்தடைந்தார். சிதம்பரத் துக்கருகிலே தவச் சூழலில் அமர்ந்தார். அப்போது ஈழ நாட்டில் இருந்து மன்னவனும் பௌத்த குருமார்களும் வந்து சைவத்தை அழிக்க முயன்றனர். அவர்களுடன் வாதிட்டு வென்று, பேசாத பெண்ணைப் பேச வைத்தார். பேசுகின்றவர்கள் அனைவரும் ஊமையாயினர்.
மாணிக்க வாசகப் பெருமான் ஆனி மகத்தன்று பெருமானுடைய திருவடி நிழலிலே சோதியாக மறைந்து விட்டார். அவர் வாழ்ந்த காலம் மூன்றாம் நூற்றாண்டு. தொண்டர் தொகையைப் பாடிய சுந்தரர் இவரைச் சிவமாகவே கருதுகின்றார். இன்றைக்கும் திருப்பெருந்துறையில் மாணிக்கவாசகர் ரிஷப வாகன தேரோட்டம் உண்டு.
அவருடைய திருவடியை நினைத்து நினைந்து உணர்ந்து உணர்ந்து நெகிழ்ந்தது நெகிழ்ந்து திருவாசகத்தை ஓதினால் சிவமாம் வெற்றி நமக்குக்கிடைக்கும்.