சந்தேக நபர் கோல திரொங்கானு, வக்காவ் தெம்புசு கோங் பாடாக் பகுதியில் இன்று விடியற்காலை 5.30 மணிக்கு கைது செய்யப்பட்டார் என்று குவாந்தான் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி வான் முகமட் ஸஹாரி வான் பூசு கூறினார்.
வேலை இல்லாத அந்த 53 வயது சந்தேகப் பேர்வழியிடமிருந்து போலீஸ் ஒரு மோதிரம், ரொக்கம், உடைகள், ஆவணங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தது என்று அவர் சொன்னார்.
குவாந்தான் நீதிமன்றத்தில் இன்று காலை நிறுத்தப்பட்ட அந்நபரை மேல் விசாரணைக்காக ஏழு நாட்களுக்கு தடுத்து வைக்கும் உத்தரவை மாஜிஸ்திரேட் நோர் இஸ்ஸாரி ஸக்காரியா பிறப்பித்தார்.
இந்நபர் கைது செய்யப்பட்டதன் வழி உணவு விநியோகிக்கும் பெண்மணி கொலைச் சம்பவத்திற்கு தீர்வு காணப்பட்டிருக்கிறது என்று வான் முகமட் ஸஹாரி கூறினார்.
ஆர்டர் செய்யப்பட்ட உணவை கெடுப்பதற்காக சென்ற நோர்ஷமிரா ஸைனால் (வயது37) பிப்ரவரி 13 ஆம் தேதி தஞ்சோங் லும்பூர் பாலத்திற்கு அருகில் உள்ள ஆற்றங்கரையில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார்.
அவரின் உடலில் காயங்கள் இருந்தன. அணிந்திருந்த நகைகள் திருடு போயிருந்தன என்று தெரிவித்த பகாங் மாநில போலீஸ் தலைவர் டத்தோஸ்ரீ யாஹ்யா ஓஸ்மான், சந்தேகப் பேர்வழி தங்கியிருந்த இடத்தை விரைந்து கண்டுபிடித்து கைது செய்ய உதவிய திரெங்கானு மாநில போலீசுக்கு நன்றி கூறினார்.
ஒரு குழந்தைக்கு தாயான நோர்ஷமிராவின் கொடூரக்கொலை மேன்மை தங்கிய பகாங் சுல்தான் அல்-சுல்தான் அப்துல்லா ரி’யாத்துடின் அல்-முஸ்தாபா பில்லா ஷா கவனத்தை ஈர்த்தது.
கொலையுண்டவரின் இல்லத்திற்கு விரைந்து அவரின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார். அதேசமயத்தில் கொலையாளியை விரைந்து கைது செய்யுமாறு போலீசை கேட்டுக்கொண்டார்.
சுல்தான், அவர் தம் துணைவியார் தெங்கு அம்புவான் பகாங் துங்கு அஸிஸா அமினா மைமுனா இஸ்கண்டாரியா, மகன் பகாங் பட்டத்து இளவரசர் தெங்கு ஹசனால் இப்ராஹிம் அலாம் ஷா ஆகியோர் தெங்கு அம்புவான் அஃப்ஸான் மருத்துவமனை தடயவியல் மருத்துவ இலாகாவுக்கு வந்து கொலையுண்டவரின் குடும்ப உறுப்பினர்களை சந்தித்து ஆறுதல் கூறினர்.
தலையில் பலமாக தாக்கப்பட்டதில் அவர் உயிரிழந்தார் வான் முகமட் ஸஹாரி கூறினார்.