கோலாலம்பூர் –
கொரோனா அச்சுறுத்தலை ஒடுக்க அரசாங்கம் அமல்படுத்திய பொதுமக்கள் நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு நேற்று தளர்த்தப்பட்டதைத் தொடர்ந்து கடைகளும் பேரங்காடிகளும் மீண்டும் திறக்கப்பட்டன.
அந்த வகையில் சில மாநிலங்களில் அடகுக்கடைகளும் காலை 9.00 மணி அளவில் திறக்கப்பட்டபோது வாடிக்கையாளர்கள் அந்தக் கடைகளுக்கு முன் திரண்டனர். அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்ததையும் காண முடிந்தது.
கோலாலம்பூர் கூட்டரசுப் பிரதேசம், சிலாங்கூர், கெடா, பேராக்கில் சில பகுதிகளில் அடகுக்கடைகள் திறக்கப்பட்டன. காலை 9.00 மணி தொடங்கி பிற்பகல் 2.00 மணி வரை அடகுக்கடைகள் திறக்கப்பட்டிருந்த நிலையில் வாடிக்கையாளர்கள் அங்கு திரண்டனர்.
தலைநகரிலும் சிலாங்கூரிலும் சில இடங்களில் அடகுக்கடைகள் நேற்று திறக்கப்பட்டிருந்தன. ஆனால் பெரும்பாலான அடகுக்கடைகள் மூடப்பட்டிருந்ததைக் காண முடிந்தது. அடகுக்கடைகள் காலை 9.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை திறக்கப்பட்டிருந்தன. ஆனால் வாடிக்கையாளர்களுக்கு நிறைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. அவர்கள் மூன்று அடுக்கு முகக்கவசம் அணிவதும் அதில் அடங்கும்.
அதே சமயம் அடகுக்கடைக்கு வரும் வாடிக்கையாளர்களின் உடல் வெப்ப அளவு 37.5 பாகை செல்சியெஸ்சாக இருக்க வேண்டும். இதற்குக் கூடுதலான வெப்ப அளவைக் கொண்டவர்கள் அடகுக்கடைக்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை. கடைகளுக்குள் வைக்கப்பட்டிருந்த கிருமிநாசினியை வாடிக்கையாளர்கள் பயன்படுத்த
வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.
நேற்றுக் காலை அதிகமானோர் அடகுக்கடைகளில் திரண்டிருந்ததைக் காண முடிந்தது. சில இடங்களில் ஒரு மீட்டர் இடைவெளியில் வரிசை பிடித்து நின்றனர். அதே சமயம் அடகுக்கடைக்குச் செல்லும் வாடிக்கையாளர்கள் முகப்படத்தின் மீது சாய்ந்து நிற்கவும் அனுமதிக்கப்படவில்லை.